Friday, April 9, 2010

நமது முன்னோர் காட்டிய தார்மிகமான பாதையில் குழந்தைகளையும் நம்முடன் அழைத்துச்செல்ல பகவான் அனுக்ரஹிக்கட்டும்

நாம் இன்றைய நாகரீகமான சூழ்நிலையிலும் கூட தெய்வத்தையும் தர்மத்தையும் நம்பி வாழ்க்கையை நடத்தி வருகிறோம், இதற்கு நம்மை ஆஸ்திகராக வளர்த்த நம் பெற்றோர்கள் காரணம் என்பதை மறக்க முடியாது, ஆகவேதான் பூஜை ஜபம் ஹோமம் பாராயணம் போன்ற விஷயங்களைப்பற்றி யாராவது ப்ரவசனம் செய்தால் நம்மால் புரிந்து கொள்ளவாவது முடிகிறது, அவ்வப்போது அவற்றில் ஈடுபடவும் முயற்சிக்கிறோம்,

ஆனால் நமது குழந்தைகள் நம் காலத்திற்குப்பிறகு இதேபோல் ஆஸ்திகர்களாக இருப்பார்களா? இதற்கு பதில் பெற்றோர்களின் கையில்தான் இருக்கிறது,

ஆம், பெற்றோர்கள்தான் குழந்தைகளை தெய்வத்தின் மீது பற்றுள்ளவர்களாக, தன்னலமின்றி மற்றவருக்கு உதவி செய்பவர்களாக வளர்க்க வேண்டும், இதை எவ்வாறு செய்வது?

பெற்றோர்கள் ஆலயங்கள், ப்ரவசனங்கள் நாம ஸங்கீர்த்தனம், முதலான நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போது கூடவே குழந்தைகளையும் அழைத்துச் செல்லலாம்,குறிப்பாக ஸ்ரீராமாயணம் ஸ்ரீபாகவதம் பக்தவிஜயம் போன்ற ப்ரவசனங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும்,

குழந்தைகளுக்கு நாம் சொல்லும் அறிவுரைகள், நல்வழிகள் விளையாட்டாகத் தோன்றலாம், ஆனால் அவற்றையே மஹான்கள் கூறும்போது ஈடுபாட்டுடன் கேட்டு அதன்படி நடக்கவும் செய்வார்கள். இன்றைய பள்ளி கல்லூரி சூழ்நிலையை விட ஆலயங்களுக்குச்செல்வதும், ராமாயணம் மஹாபாரதம் பாகவதம் போன்ற ப்ரவசனங்களைக் கேட்பதும்தான் குழந்தைகளுக்கு நமது கலாச்சாரத்தையும் ஸம்ப்ரதாயத்தையும் நன்நடத்தையும் நன்கு புரியவைக்கும்,

எப்போதும் பள்ளிக்கூடம் கல்லூரி (வேலை) என்று காரணம் சொல்லி ஆன்மிக நிகழ்ச்சிகளில், குறிப்பாக ஏராளமான சிலவுசெய்து வீட்டில் நடத்தப்படும் ஹோமம், பூஜை, ப்ரவசன நிகழ்ச்சிகளில் கூட குழந்தைகள் கலந்து கொள்ளாமல் இருப்பதை மாற்ற முயற்சிக்கலாம்,

பள்ளிப்படிப்பைவிட தெய்வஅருளே முக்கியம், தெய்வ அருளால் சிறிய முயற்சியும் பெரும் வெற்றியைத்த்தரும் என்பதை குழந்தைகளுக்கு புரிய வைக்கலாம், பள்ளிக்குச்செல்லும் முன்பாக ஸ்வாமிக்கும் பெரியோர்களுக்கும் நமஸ்காரம் செய்தல், காயத்ரீ ஜபம் செய்தல், நெற்றியில் குங்குமம் சந்தனம் போன்ற திலகம் இட்டுக் கொள்ளுதல் போன்ற அடிப்படை பழக்கங்களைக் கற்றுக்குடுக்கலாம், குழந்தைகளின் வருங்கால நன்மைக்கு பெற்றோர் செய்யும் மிகப்பெரும் உதவி இது தான்,

இதற்குத்தகுந்த சூழ்நிலையை ஏற்படுத்தி நமது முன்னோர் காட்டிய தார்மிகமான பாதையில் குழந்தைகளையும் நம்முடன் அழைத்துச்செல்ல பகவான் அனுக்ரஹிக்கட்டும்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.