Friday, April 9, 2010

ஆலயங்களில் இந்த ப்ரார்த்தனையைச் செய்ய ஸ்ரீ பகவான்அனுக்ரஹிக்கட்டும்

ஒவ்வொரு ஆலயங்களிலும் தினஸரி பூஜைகளின் முடிவில் ஆலய அர்ச்சகர் ராஜா தார்மிகோ விஜயீ பவது தேயம் நிருபத்ரவோஸ்து என்று கடவுளிடம் ப்ரார்த்திப்பது வழக்கம், அதாவது அந்தப்பகுதி மக்கள் நலமாக வாழவேண்டும் என்பதுடன், அந்த தேசத்து அரசன் தர்மம் தவறாது மக்களை வழிநடத்திச்செல்ல வேண்டும் என்றும் அவ்வாறு தர்ம வழியில் மக்களை அழைத்துச்செல்லும் அரசனுக்கு எப்போதும் வெற்றி கிடைக்கட்டும் என்றும் பகவானிடம் ப்ரார்த்திப்பார்கள்,

அத்துடன் விவாஹம் உபநயனம் க்ருஹப்ரவேசம் போன்ற தனி மனிதரின் சொந்த நிகழ்ச்சிகளிலும் அந்த நிகழ்ச்சிகளின் கடைசியில் ஸ்வஸ்திவாசனம் என்பதாக மேற்கூறிய ப்ரார்த்தனையைச்சொல்லி பெரியோர்களை விட்டு அதை ததாஸ்து என்று ஆமோதிக்கச் செய்வார்கள். இதை கூர்ந்து கவனித்தால் இந்த ப்ரார்த்தனை எவ்வளவு பரந்த மனப்பான்மையுள்ளது என்பது புலப்படும்,

ஒரு தேசத்தின் நலன் தேச மக்களின் நலன் அந்த தேசத்தை ஆளும் அரசனை நம்பித்தான் இருக்கிறது, அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி, நல்லவனாகவும் தர்மம் நீதி தவறாதவனாகவும் பாப(தவறான)வழியில் செல்லத் தயங்குபவனாகவும் அரசன் இருந்தால் தெய்வ அருளால் தேசம் வெள்ளம் புயல் போன்ற இயற்கை சீற்றங்களின்றி எப்போதும் ஸுபிக்ஷமாக இருக்கும் ,

நமது பாரத தேசத்தில்தான் எவ்வளவு ஆலயங்கள்? நகரங்கள் தோறும் கிராமங்கள் தோறும் தெருக்கள் தோறும் என கணக்கிலடங்காத ஆலயங்கள், பல ஆலயங்களில் முறையாக பூஜைகள் நடத்தப்படுகின்றன, ஆனாலும் அந்த ஆலய பூஜைகளின் முடிவில் இந்த ப்ரார்த்தனை செய்யப்படுகிறதா? என்பது தெரியவில்லை,

ஆலயங்களுக்குச் செல்பவர்களில் பலர் தனது குடும்ப ஸுகங்களையே கடவுளிடம் ப்ரார்த்திக்கிறார்கள், ஆலயங்களுக்குச்செல்லும் ஒவ்வொருவரும் ராஜா தார்மிகோ விஜயீ பவது என்றும் தேசோயம் நிருபத்ரவோஸ்து என்றும் தேச நலனை ப்ரார்த்தித்தால் நிஸ்சயம் நமது தேசத்துக்கு நல்ல அரசனும் தேசத்துக்கு வெற்றியும் ஏற்படும் , எதையும் நாம் கேட்டால்தானே பகவான் கொடுப்பார்? ஆகவே கேட்பதில் கவனம் தேவை, தேசத்துக்குத் தலைவர்களை தேர்ந்தெடுக்க முயலும் இந்த நேரத்திலாவது ஆலயங்களில் இந்த ப்ரார்த்தனையைச் செய்ய ஸ்ரீ பகவான்அனுக்ரஹிக்கட்டும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.