Friday, April 9, 2010

இன்பம் துன்பம் ஆகியவைகள் கலந்ததே மனிதனின் வாழ்க்கை

வெற்றி தோல்வி கௌரவம் அவமானம் லாபம் நஷ்டம் இன்பம் துன்பம் ஆகியவைகள் கலந்ததே மனிதனின் வாழ்க்கை, இருப்பினும் இவற்றால் ஏற்படும் துன்பங்களை மனிதன் குறைத்துக்கொள்ள முடியும், நாம் ஒரு ஸம்பவத்தை எதிர்பார்க்கும் போது அந்த ஸம்பவம் நாம் நினைப்பதற்கு மாறாக நடந்து விட்டால் அதனால் நமது மனது ஏமாற்ற மடைகிறது, தாங்கமுடியாத துன்பமுண்டாகிறது, ஆனால் இந்தத்துன்பத்தின் அளவு என்பது நமது எதிர்பார்பின் அளவுக்கேற்ப அமைகிறது,

நிஸ்சயம் நடக்கும் என்று நாம் இறுகிய மனதுடன் அதிக ஆவலுடன் ஒரு நிகழ்ச்சியை எதிர்பார்த்து, அந்த நிகழ்ச்சி நாம் எதிர்பார்த்தபடி நடக்காவிட்டால், அதிக துன்பமும் ,கடமையைச் செய்து விட்டு எப்படியும் நடக்கட்டும், நடப்பவை நன்மைக்கே என்று தளர்ந்த மனதுடன் அதிக எதிர்பார்ப்பின்றி இருந்து,நாம் எதிர்பார்த்த ஸம்பவம் எதிபார்த்தபடி நடைபெறா விட்டால் நமக்குக் குறைவான துன்பமும் ஏற்படுகிறது.

தற்சமயம் அனைத்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பரீக்ஷை நடைபெறும் காலம், மாணவ மாணவிகள், தாங்கள் ஒரு வருஷமாக படித்த படிப்பை நினைவில் கொண்டு தேர்வு எழுதத்தயாராகிக் கொண்டிருக்கிறார்கள், இவர்கள் பரீக்ஷையில் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்று சிறந்த எதிர்காலத்தை இவர்களுக்கு உறுவாக்கித் தருவதில் ஆசிரியரைப் போன்றே அவர்களின் பெற்றோருக்கும் மிகமுக்கியமான பங்கு உண்டு,

ஸரியான நேரத்தில் புஷ்டியான ஸாத்விகமானஆஹாரங்களைத் தருதல், வீட்டில் படிப்பதற்குத் தகுந்த சூழ்நிலையை உறுவாக்கித்தருதல், தெய்வ பக்தியுடன் பாடங்களை படிக்கச் செய்தல் போன்றவற்றை பெற்றோர்கள் பொருப்புடன் செய்வதே குழந்தைகள் வெற்றி பெற முக்கியமான காரணம், இதைத்தான் பல பெற்றோர்கள் செய்கிறார்கள், ஆனால் ஒரு சில பெற்றோரும் ஆசிரியரும் குழந்தைகள் மனதில் அதிகமான எதிர்பார்ப்பை உறுவாக்கி விடுகிறார்கள், அதாவது இந்த மாநிலத்திலேயே பள்ளியிலேயே நீ தான் முதல் மாணவனாக மாணவியாக பரீக்ஷையில் தேர்ச்சி பெறவேண்டும்,

குறிப்பிட்ட மாணவனை மாணவியை க்காட்டி அவரை விட நீ அதிக மார்க் வாங்க வேண்டும், என்று அடிக்கடி (மாணவரே வெறுப்படையுமளவிற்கு) எப்போதும் உபதேசம் செய்கிறார்கள், இதனால் மாணவரின் மனதில் எழும் எதிர்பார்ப்பு எல்லை மீறியதாக மிகவும் அதிகமானதாக ஏற்பட்டு விடுகிறது, இதன் விளைவு, அந்த மாணவமாணவி எதிர்பார்த்தபடி தேர்வில் மாநிலத்திலேயே பள்ளியிலேயே முதல் மாணவராக வர இயலாவிட்டால், அல்லது தேர்ச்சியே பெறாவிட்டால் அப்போது ஏற்படும் தோல்வியை (எதிர்பார்ப்பு நிறைவேறாததால்)அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை, அந்தத் தோல்வியிலிருந்து அவர்கள் மீண்டுவர நீண்டநாட்கள் ஆகின்றன, ஒரு சில மாணவர்கள் தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் யாரையும், ஏன் உறவினர்களைக் கூட பார்க்கப் பிடிக்காமல் வெட்கப்படுகிறார்கள்,

படிக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு மனபாதிப்புக்கு அவர்கள் மனதில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆசிரியர் மற்றும் பெற்றோரே ஒரு விதத்தில் முக்கியக் காரணமாகின்றனர்.ஆகவே பெற்றோர்கள் தாங்களின் கடமையை உணர்ந்து கொண்டு செயல்பட வேண்டும், பெற்றோர்கள் குழந்தைகளுடன் கூட அமர்ந்து பாடங்களில் ஸந்தேஹங்களை தீர்த்து வைத்து, காலத்தில் தேவையான ஆஹாரங்களைத் தந்து உதவலாம், குறிப்பாக குழந்தைகளை தூங்கும் போது எழுப்பக்கூடாது,

ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரம் கட்டாயம் தூங்கவேண்டும், அப்போது தான் இந்த உடல் நன்கு ஒத்துழைக்கும், புத்தி நன்கு சிந்தித்து செயல்படும், ஆகவே குழந்தைகளை தூங்கும் போது (அரைகுறை தூக்கத்தில்) எழுப்பி விடுதல், படி படி என்று அடிக்கடி தொந்தரவு செய்தல், (தாங்கள் டிவி பார்த்துக் கொண்டே) அவர்களை டி.வி பார்க்காதே பேப்பர் படிக்காதே என்று சொல்லுதல் ஆகியவற்றை பெற்றோர் தவிர்க்க முயற்சிக்கலாம். அத்துடன் பெற்றோர் தங்கள் குழந்தையின் மனதில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தாமல் நீ உன் கடமையை ஸரிவரச் செய், நிஸ்சயம் நீ வெற்றி பெறுவாய் என்று அவர்களின் மனதில் நம்பிக்கையை வளர விடலாம்,

அதே ஸமயம் ஒருவரின் தோல்விதான் மற்றவரின் வெற்றி என்பதையும் எதுவும் பகவானின் செயல் எல்லாம் நன்மைக்கே என்னும் கருத்தையும் அவ்வப்போது அவர்களுக்கு எடுத்துக் கூறலாம், இந்த எண்ணம் அவர்களின் மனதில் இருந்தால் அவர்கள் வெற்றியடையும் போது அதிகமான ஸந்தோஷம் ஏற்படும், தோல்வியைத் தாங்கும் மனப்பக்குவமும் வந்து விடும்,இதை செயல்படுத்த நமக்கு ஸ்ரீ பகவான் அனுக்ரஹிக்கட்டும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.