Friday, April 9, 2010

தீபாவளிப்பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்து மற்றவரையும் மகிழ்விக்க பகவான் அனுக்ரஹிக்கட்டும்.

ஒவ்வொரு நாளும் அதிகாலைப்பொழுது நமக்கு மிகவும் மகிழ்ச்சியான நேரம். ப்ரம்ஹ முஹூர்த்தம் உஷ:காலம், அருணோதயம் ஸூர்யோதயம் என்று பற்பல பெயரில் குறிப்பிடப்படும் இந்த அதிகாலைப் பொழுது நமக்கு புத்துணர்ச்சியைத் தரும் காலம், இருந்தாலும் தீபாவளியன்று அதிகாலையில் மட்டும் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் மிகுந்த மகிழ்ச்சி காணப்படுகிறது,

இந்த அதிகாலைப் பொழுதில் ஏற்படும் மகிழ்ச்சி மற்றநாட்களில் இல்லை, அப்படி தீபாவளியன்று அதிகாலைக்கு மட்டும் என்ன விசேஷச்சிறப்பு? அன்று மட்டும் இவ்வளவு மகிழ்ச்சியாக காலைப்பொழுதைப் போக்குவதற்கு முக்கியக்காரணம் யார்? இதை ஆராய்ந்தால் இதற்குக் காரணம் ஒருதாயின் தியாகமே என்பது விளங்கும்.



தனது ஒரே மகன் மிகவும் துஷ்டனாக, கொடியவனாக வாழ்ந்து மக்களைத் துன்புறுத்தியபொழுது த்யஜேத் ஏகம் குலஸ்யார்த்தே என்னும் நீதி சாஸ்திரப்படி தனது மகனை இப்பூமியிலிருந்து அப்புறப்படுத்தினால்தான் மற்றவர்கள் நலமாக வாழ்வார்கள் என்னும் உயர்ந்த நோக்கத்தோடு ஸ்ரீ மஹாவிஷ்ணுவிடம் தனது மகனின் சாவை வரமாகக் கேட்டுப்பெற்ற தாயின் த்யாகத்தை என்ன சொல்வது? ,



அத்துடன் எவ்வளவுதான் கொடியவனாயினும் அவன் தன் மகனல்லவா? தனது மகனை உலக மக்கள் அனைவரும் எப்போதும் நினைவு வைத்திருக்க வேண்டும் என்னும் எண்ணம் ஒரு தாய்க்கு ஏற்படுவது ஸஹஜம்தானே. இந்த நோக்கத்தில்தான் தனது மகன் இறந்த நாளில் தனது மகன் நினைவாக அனைவரும் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று வரம் கேட்டு பெற்றாள் பூமாதேவி.



தீபாவளியன்று நல்லெண்ணையில் நீ வாஸம் செய்யவேண்டும் என்னும் வேண்டுதலை ஏற்றாள் மஹாலக்ஷ்மி. ஹே கங்காதேவியே தீபாவளியன்று உலகமனைத்திலும் இருக்கும் அனைத்து நதிகளிலும், ஏரி குளங்களிலும், கிணற்று ஜலத்திலும் நீ ஸான்னித்யமாக இருக்கவேண்டும் என்று கங்கையை ப்ரார்த்தித்தாள். கங்கையும் வரமளித்தாள். ஆகவேதான் தைலே லக்ஷ்மீர் ஜலே கங்கா என்பதாக தீபாவளியன்று நல்லெண்ணையில் மஹாலக்ஷ்மியும் ஜலத்தில் கங்கையும்வஸிக்கிறார்கள் என்கிறது சாஸ்திரம்.



நாமும் இந்த த்யாகத்தை முழுமையாக உணர்ந்துகொண்டு மகிழ்ச்சியுடன் தீபாவளிப்பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்து மற்றவரையும் மகிழ்விக்க பகவான் அனுக்ரஹிக்கட்டும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.