Friday, April 9, 2010

மழை பெய்விக்க பல வழிகள் இருக்கின்றன

இவ்வுலகில் ஜீவராசிகளையும், அவர்கள் உயிர் வாழத் தேவையானவற்றையும் ஸ்ருஷ்டி செய்த பகவான், மேலும் ஸ்ருஷ்டி செய்யும் சக்தியை புத்தியை மனிதனுக்கு வழங்கினார், ஆனால் யேஷாமன்னம் வாதோ வர்ஷ மிஷவ: என்பதாக உணவு காற்று மழை ஆகிய மூன்றை ஸ்ருஷ்டிக்கும் கட்டுப்படுத்தும் சக்தியை மட்டும் மனிதனுக்குத் தராமல் தன்னிடமே வைத்துக் கொண்டார்,

ஆகவேதான் மனிதன் எவ்வளவோ முயற்சித்தும் உணவு காற்று மழை ஆகியவற்றை உத்பத்தி செய்ய கட்டுப்படுத்த முடியவில்லை, இதற்கு தெய்வ அருளுடன் கூடிய மனித முயற்சி தேவை, மனித முயற்சி மட்டும் வெற்றியைத் தராது.

தமிழகத்தில் தற்சமயம் மழை பெய்ய வேண்டிய காலம், ஆனால் இதுவரை மழை முழுமையாகப் பெய்யவில்லை, விவஸாயத்துக்கு ஆதாரமான மேட்டூர் டாமிலும் ஜலமில்லை, காவேரீ போன்ற நதிகள் வறண்டு கிடக்கின்றன, விவஸாயிகள், வாயில்லா ஜீவன்கள், செடி கொடிகள் ஆகிய அனைவரும் மழையை எதிர்பார்த்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் மட்டுமல்ல, பாரதம் முழுவதுமே மழைக்குறைவு என்கிறார்கள் விக்ஞானிகள், இதற்குக் காரணம் எதுவாக இருந்தாலும் தற்சமயம், தேவையான மழையைப்பெற பகவானை ஆராதித்தல் என்பதே ஸரியான வழிமுறை,

அயோத்தியில் ஒரு ஸமயம் மழை பொய்த்த போது ருஷ்யச்ருங்கரை அயோத்திக்கு அழைத்து வந்து யாகங்களை நடத்தி மழையை பெய்வித்தார் தசரதர், என்னும் (ராமாயண) சரித்திரம் மழைக்குகட்டாயம் தெய்வ வழிபாடு தேவை என்பதை உணர்த்துகிறது.

மழை பெய்விக்க பல வழிகள் இருக்கின்றன, அக்னிஹோத்ரிகள் காரீரி இஷ்டி என்பதைச்செய்தால் மழை பெய்யும் என்கிறது ச்ரௌதம்,

வேதம் கற்றவர்கள் பர்ஜன்ய சாந்தி (வருண ஜபம்) செய்தால் மழை பெய்யும் என்கிறது ஸ்ம்ருதி,

மஹாபாரதத்தில் விராடபர்வா பாராயணம் செய்தால் மழைபெய்யும் என்கிறது புராணம்,

நீர் நொச்சி ஸமித்தால் கணபதி ஹோமம் செய்தால் மழை பெய்யும் என்கிறது தந்த்ர சாஸ்திரம்,

ஒரு ராகத்தைப் பாடினால் மழை பெய்யும் என்கிறது ஸங்கீத சாஸ்த்ரம்,

ஆலயங்களில் நந்திக்கு ஜலம் கட்டுதல் போன்றவற்றைத் தெரிவிக்கிறது ஆகம சாஸ்திரம்,

ஆழ்வார்களின் பாடல்களை பதிகங்களை பாடுவதால் மழைபெய்யும் என்கின்றன தமிழ் வேதங்கள்,

இவைகள் அனைத்துமே மழைபெய்யச்செய்யும் சக்திவாய்ந்தவை, அவரவரின் சக்திக்குத் தக்கவாறு மழைக்காக மேற்கூறியவற்றைச் செய்யலாம்,

இவை எதுவும் தெரியாதவர்கள், அவரவர் வீட்டிலோ ஆலயங்களிலோ இந்த வருஷம் உரிய காலத்தில் தேவையான அளவு மழை பெய்ய வேண்டும் என்று மனமுறுகி பகவானிடம் ப்ரார்த்தனை செய்யலாம். இதற்கு பகவான் அனுக்ரஹிக்கட்டும்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.