Friday, April 9, 2010

நம்மை நாமே ஆத்ம பரிசீலனை செய்து கொண்டாலே ஓரளவு நாம் நமது தவறை திருத்திக்கொண்டு நல்வழியில் செல்லத்துவங்குவோம்

கால: க்ரீடதி கச்சத்யாயு: காலம் விளையாடுகிறது ஆயுள் சென்றுகொண்டே இருக்கிறது என்கிறார் ஷ்ரீ ஆதிசங்கரர் பஜகோவிந்த ஸ்தோத்ரத்தில், அது உண்மைதான், ஒவ்வொரு வருஷமும் பிறக்கும் போதும் ஒவ்வொருவரின் வயதும் கூடிக் கொண்டே இருக்கிறது, அதாவது மேலும் வாழ வேண்டிய நாட்களில் ஒருவருஷம் குறைந்துள்ளது என்பதும் நமக்கு உணர்த்தப்படுகிறது, ஆகவேதான் நமது சாஸ்திரங்களும் ஒவ்வொரு மனிதனும் காலை எழுந்தவுடன் இன்று நாம் என்னென்ன தர்மங்களை செய்ய வேண்டும்? என்று சிறிதுநேரம் யோசித்து தீர்மானித்துக்கொள்ள வேண்டும் என்றும், இரவு படுக்கும்போது இன்று நாம் எவ்வளவு தர்மம் செய்தோம்? எவ்வளவு அதர்மம் செய்தோம்? என்று நினைத்துப் பார்க்க வேண்டும் என்றும் கூறுகிறது.

மனிதனாகப் பிறந்ததின் பயனையும், நமது குறிக்கோளையும், அடைவதற்கான பயணத்தில் நாம் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறோம் என்பதை ஆராய வேண்டிய நாள்தான் புத்தாண்டு துவங்கும் நாள், சென்ற வருஷத்தில் நாம் செய்யவேண்டிய கடமைகளில் ஸரியாகச்செய்தவை எத்தனை? செய்யத் தவறியவை எத்தனை? மற்றவர் மத்தியில் நம்மைப்பற்றிய ய‹ஸ் (புகழ்) அதிகரித்ததா? அல்லது நமது புகழ் குறைந்ததா? அவ்வப்போது தலையெடுத்து நம்மை தவறான வழியில் செலுத்த முயற்சிக்கும் கோபம் அஹங்காரம் ஆத்திரம் பொறாமை போன்றவைகளை நாம் எவ்வளவு தூரம் கட்டுப்படுத்தியுள்ளோம்?

நமது வாழ்க்கை நம்மைச் சேர்ந்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உபகாரமாக பயனுள்ளதாக அமைந்துள்ளதா? மற்றவர்களுக்காக, குறிப்பாக உலகத்துக்காக நாம் செய்தது - செய்ய வேண்டியது என்ன?, நாம் பணம் புகழ் ஆகியவற்றை நேர்மையான வழியில்தான் ஸம்பாதிக்கிறோமா? மற்றவருக்குச்சேர வேண்டியவற்றை அபஹரிக்காமல் இருக்கிறோமா? நம்மை நம்பி வாழும் நமது குடும்பத்தினரை நாம் மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டுள்ளோமா?, நம்மை உருவாக்கி வளர்த்துவிட்ட நமது பெற்றோர்களுக்கும் குருவுக்கும் ஆற்ற வேண்டிய கடமைகளை ஸரியாகச்செய்தோமா? என்றெல்லாம் ஆலோசிக்க வேண்டிய நாள்தான் புத்தாண்டு பிறக்கும் நாள், இவ்வாறு நம்மை நாமே ஆத்ம பரிசீலனை செய்து கொண்டாலே ஓரளவு நாம் நமது தவறை திருத்திக்கொண்டு நல்வழியில் செல்லத்துவங்குவோம், இதற்கு ஷ்ரீபகவான் அனுக்ரஹிக்கட்டும்.

அர்ச்சகர்கள், ஆலயத்தில் ஆசாரத்தோடும் ச்ரத்தையோடும் பூஜை செய்யவும் வேத மந்திரங்களை ஸ்வர சுத்தத்துடன் சொல்லவும் ஸ்ரீபகவான் அனுக்ரஹிக்கட்டும்.

நமதுதேசத்தின் கலாசாரத்தை மற்ற தேசங்களுக்கு வெளிப்படுத்துபவை நமது ஆலயங்களே. ஒவ்வொரு ஊரிலும் பற்பல தெய்வ ஆலயங்கள், கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம், ஆலயம் தொழுவது சாலவும் நன்று போன்ற பழமொழிகளும் ஆலயங்களின் பெருமைகளை நமக்கு எடுத்துரைக்கின்றன,



ஆபி4ரூப்யாச்ச மூர்த்தீனாம் தே3வ: ஸான்னித்4யம்ருச்ச2தி என்பதாக ஆலயங்களில் தெய்வ உருவங்களை (சில்ப) சாஸ்திர முறைப்படி வடிவமைப்பதாலும், அர்ச்சகஸ்ய ப்ரபா4வேன சிலா ப4வதி கேவ:(ங்கர:). என்பதாக சிலைகளை ஆகம வைதீக தாந்த்ரீக முறைப்படி ப்ரதிஷ்டை செய்து பூஜைகள் செய்யப் படுவதாலும், வருடாவருடம் திருவிழாக்கள் நடத்தப் படுவதாலும் தெய்வங்களுக்கு அருட்சக்தி ஸித்திக்கிறது, (தீக்ஷை பெற்று) வேதம் ஆகம வைதீகம் ப்ரயோகங்கள் கற்று, தெய்வங்களை பூஜை செய்யும் அர்ச்சகர்கள் (சிவாச்சார்யர்கள்) தெய்வ அருளை மக்களுக்கு பெற்றுத்தருபவர்கள் , புயல் வெள்ளம், போன்ற ஆபத்தான காலங்களிலும் பூஜைகளை தவறாது செய்து வரும் இவர்கள் பொதுமக்களுக்காக ஆற்றும் பணி மிகவும் போற்றத்தக்கது,



ஆனால் தற்காலத்தில் சில அர்ச்சகர்கள் தாங்களது பெருமைகளை முழுமையாக உணராததால் உலகத்துடன் (நாகரிகத்துடன்) கலந்து விடுகின்றார்கள், இவர்களும் தாங்களது தகுதியை உணர்ந்து, வேதம் ஆகமம் ஸம்ஸ்க்ருதம் பாடல்கள் ஆகியவற்றில் திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்ளலாம்,



பக்தர்களின் பெயர், ராசி சொல்லி அர்ச்சனை, ஸங்கல்பம் சொல்ல ஸம்ஸ்க்ருத ஞானம் அவசியம், அபிஷேகம் தீபாராதனை போன்ற காலங்களில் வேத மந்திரத்தை ஸ்வர சுத்தத்துடன் சொல்ல வேதத்தை முறையாக கற்றுக்கொள்ளுதல் அவசியம். இவற்றுடன் ஆசாரமும் (தூய்மை) அவசியம், முச்சந்தியில் அமைந்திருக்கும் விநாயகரை பூஜிக்கக்கூட ஆசாரம் தேவை.



தினஸரி ஸ்னானம் செய்தல், திருமணமானவர்கள் பஞ்சகச்ச முறையில் வேஷ்டி கட்டிக் கொள்ளுதல், குடுமி வைத்துக் கொள்ளுதல், வெளி இடங்களில் சாப்பிடாது இருத்தல், ஆகியவற்றை ஒவ்வொரு அர்ச்சகரும் எப்போதும் கடைபிடிக்க வேண்டும், தெய்வங்களை பூஜை செய்யும் போதாவது இவ்வாறு இருக்க முயற்சிக்கலாம்,



மக்கள் ஆலயத்தை நாடுகிறார்கள், தெய்வத்தை நம்புகிறார்கள், தெய்வ ஸான்னித்யம் அர்ச்சகர்களின் கையிலுள்ளது, ஆலய தெய்வத்தின் அருளை மக்களுக்குப் பெற்றுத் தரும் பாக்யத்தைப் பெற்றுள்ள அர்ச்சகர்கள், ஆலயத்தில் ஆசாரத்தோடும் ச்ரத்தையோடும் பூஜை செய்யவும் வேத மந்திரங்களை ஸ்வர சுத்தத்துடன் சொல்லவும் ஸ்ரீபகவான் அனுக்ரஹிக்கட்டும்.

நமது முன்னோர் காட்டிய தார்மிகமான பாதையில் குழந்தைகளையும் நம்முடன் அழைத்துச்செல்ல பகவான் அனுக்ரஹிக்கட்டும்

நாம் இன்றைய நாகரீகமான சூழ்நிலையிலும் கூட தெய்வத்தையும் தர்மத்தையும் நம்பி வாழ்க்கையை நடத்தி வருகிறோம், இதற்கு நம்மை ஆஸ்திகராக வளர்த்த நம் பெற்றோர்கள் காரணம் என்பதை மறக்க முடியாது, ஆகவேதான் பூஜை ஜபம் ஹோமம் பாராயணம் போன்ற விஷயங்களைப்பற்றி யாராவது ப்ரவசனம் செய்தால் நம்மால் புரிந்து கொள்ளவாவது முடிகிறது, அவ்வப்போது அவற்றில் ஈடுபடவும் முயற்சிக்கிறோம்,

ஆனால் நமது குழந்தைகள் நம் காலத்திற்குப்பிறகு இதேபோல் ஆஸ்திகர்களாக இருப்பார்களா? இதற்கு பதில் பெற்றோர்களின் கையில்தான் இருக்கிறது,

ஆம், பெற்றோர்கள்தான் குழந்தைகளை தெய்வத்தின் மீது பற்றுள்ளவர்களாக, தன்னலமின்றி மற்றவருக்கு உதவி செய்பவர்களாக வளர்க்க வேண்டும், இதை எவ்வாறு செய்வது?

பெற்றோர்கள் ஆலயங்கள், ப்ரவசனங்கள் நாம ஸங்கீர்த்தனம், முதலான நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போது கூடவே குழந்தைகளையும் அழைத்துச் செல்லலாம்,குறிப்பாக ஸ்ரீராமாயணம் ஸ்ரீபாகவதம் பக்தவிஜயம் போன்ற ப்ரவசனங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும்,

குழந்தைகளுக்கு நாம் சொல்லும் அறிவுரைகள், நல்வழிகள் விளையாட்டாகத் தோன்றலாம், ஆனால் அவற்றையே மஹான்கள் கூறும்போது ஈடுபாட்டுடன் கேட்டு அதன்படி நடக்கவும் செய்வார்கள். இன்றைய பள்ளி கல்லூரி சூழ்நிலையை விட ஆலயங்களுக்குச்செல்வதும், ராமாயணம் மஹாபாரதம் பாகவதம் போன்ற ப்ரவசனங்களைக் கேட்பதும்தான் குழந்தைகளுக்கு நமது கலாச்சாரத்தையும் ஸம்ப்ரதாயத்தையும் நன்நடத்தையும் நன்கு புரியவைக்கும்,

எப்போதும் பள்ளிக்கூடம் கல்லூரி (வேலை) என்று காரணம் சொல்லி ஆன்மிக நிகழ்ச்சிகளில், குறிப்பாக ஏராளமான சிலவுசெய்து வீட்டில் நடத்தப்படும் ஹோமம், பூஜை, ப்ரவசன நிகழ்ச்சிகளில் கூட குழந்தைகள் கலந்து கொள்ளாமல் இருப்பதை மாற்ற முயற்சிக்கலாம்,

பள்ளிப்படிப்பைவிட தெய்வஅருளே முக்கியம், தெய்வ அருளால் சிறிய முயற்சியும் பெரும் வெற்றியைத்த்தரும் என்பதை குழந்தைகளுக்கு புரிய வைக்கலாம், பள்ளிக்குச்செல்லும் முன்பாக ஸ்வாமிக்கும் பெரியோர்களுக்கும் நமஸ்காரம் செய்தல், காயத்ரீ ஜபம் செய்தல், நெற்றியில் குங்குமம் சந்தனம் போன்ற திலகம் இட்டுக் கொள்ளுதல் போன்ற அடிப்படை பழக்கங்களைக் கற்றுக்குடுக்கலாம், குழந்தைகளின் வருங்கால நன்மைக்கு பெற்றோர் செய்யும் மிகப்பெரும் உதவி இது தான்,

இதற்குத்தகுந்த சூழ்நிலையை ஏற்படுத்தி நமது முன்னோர் காட்டிய தார்மிகமான பாதையில் குழந்தைகளையும் நம்முடன் அழைத்துச்செல்ல பகவான் அனுக்ரஹிக்கட்டும்

ஆலயங்களில் இந்த ப்ரார்த்தனையைச் செய்ய ஸ்ரீ பகவான்அனுக்ரஹிக்கட்டும்

ஒவ்வொரு ஆலயங்களிலும் தினஸரி பூஜைகளின் முடிவில் ஆலய அர்ச்சகர் ராஜா தார்மிகோ விஜயீ பவது தேயம் நிருபத்ரவோஸ்து என்று கடவுளிடம் ப்ரார்த்திப்பது வழக்கம், அதாவது அந்தப்பகுதி மக்கள் நலமாக வாழவேண்டும் என்பதுடன், அந்த தேசத்து அரசன் தர்மம் தவறாது மக்களை வழிநடத்திச்செல்ல வேண்டும் என்றும் அவ்வாறு தர்ம வழியில் மக்களை அழைத்துச்செல்லும் அரசனுக்கு எப்போதும் வெற்றி கிடைக்கட்டும் என்றும் பகவானிடம் ப்ரார்த்திப்பார்கள்,

அத்துடன் விவாஹம் உபநயனம் க்ருஹப்ரவேசம் போன்ற தனி மனிதரின் சொந்த நிகழ்ச்சிகளிலும் அந்த நிகழ்ச்சிகளின் கடைசியில் ஸ்வஸ்திவாசனம் என்பதாக மேற்கூறிய ப்ரார்த்தனையைச்சொல்லி பெரியோர்களை விட்டு அதை ததாஸ்து என்று ஆமோதிக்கச் செய்வார்கள். இதை கூர்ந்து கவனித்தால் இந்த ப்ரார்த்தனை எவ்வளவு பரந்த மனப்பான்மையுள்ளது என்பது புலப்படும்,

ஒரு தேசத்தின் நலன் தேச மக்களின் நலன் அந்த தேசத்தை ஆளும் அரசனை நம்பித்தான் இருக்கிறது, அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி, நல்லவனாகவும் தர்மம் நீதி தவறாதவனாகவும் பாப(தவறான)வழியில் செல்லத் தயங்குபவனாகவும் அரசன் இருந்தால் தெய்வ அருளால் தேசம் வெள்ளம் புயல் போன்ற இயற்கை சீற்றங்களின்றி எப்போதும் ஸுபிக்ஷமாக இருக்கும் ,

நமது பாரத தேசத்தில்தான் எவ்வளவு ஆலயங்கள்? நகரங்கள் தோறும் கிராமங்கள் தோறும் தெருக்கள் தோறும் என கணக்கிலடங்காத ஆலயங்கள், பல ஆலயங்களில் முறையாக பூஜைகள் நடத்தப்படுகின்றன, ஆனாலும் அந்த ஆலய பூஜைகளின் முடிவில் இந்த ப்ரார்த்தனை செய்யப்படுகிறதா? என்பது தெரியவில்லை,

ஆலயங்களுக்குச் செல்பவர்களில் பலர் தனது குடும்ப ஸுகங்களையே கடவுளிடம் ப்ரார்த்திக்கிறார்கள், ஆலயங்களுக்குச்செல்லும் ஒவ்வொருவரும் ராஜா தார்மிகோ விஜயீ பவது என்றும் தேசோயம் நிருபத்ரவோஸ்து என்றும் தேச நலனை ப்ரார்த்தித்தால் நிஸ்சயம் நமது தேசத்துக்கு நல்ல அரசனும் தேசத்துக்கு வெற்றியும் ஏற்படும் , எதையும் நாம் கேட்டால்தானே பகவான் கொடுப்பார்? ஆகவே கேட்பதில் கவனம் தேவை, தேசத்துக்குத் தலைவர்களை தேர்ந்தெடுக்க முயலும் இந்த நேரத்திலாவது ஆலயங்களில் இந்த ப்ரார்த்தனையைச் செய்ய ஸ்ரீ பகவான்அனுக்ரஹிக்கட்டும்.

ஸாதுக்கள், மஹான்கள், பாகவதர்கள், பீடாதிபதிகள், ஆசார்ய புருஷர்கள், ஆகியோர், தன்னை கட்டுப்படுத்தும் ஸமூகத்திலிருந்து வெளிவந்து

கலியுகத்தில் மக்கள் மேன்மையடைய மிகச்சுலபமான வழி ஸத்ஸங்கம் என்பதுதான், அதாவது ஸாதுக்களுடன் சேர்ந்து கொள்வது, மஹாந்தஸ்தே ஸமசித்தா: ப்ரசாந்தா: என்னும் ஸ்ரீ பாகவத வசனப்படி தன்னலம் கருதாது வேற்று மனப்பான்மையின்றி மக்களுக்கு நன்மையை போதிப்பவர்களே ஸாதுக்கள் மஹான்கள் ஆசார்யர்கள் எனப்படுகிறார்கள், பாரததேசம் முழுவதும் சுற்றிவரும் இவர்கள் இன்றும்கூட ஸதுபதேசம் ப்ரவசனம் நாம ஸங்கீர்த்தனம் மூலம் மக்களுக்கு நன்மை செய்கிறார்கள், இவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வதே ஸத்ஸங்கம் எனப்படுகிறது,

தற்சமயம் மக்கள் சிலர் இப்படிப்பட்ட ஸாதுக்களிடம் தொடர்பு கொள்கிறார்கள் என்றாலும் பலரால் ஸுலபமாகத்தொடர்புகொள்ள இயலவில்லை, இவர்களுடன் தொடர்புகொள்ள, இவர்களின் வருகைக்காக, இவரது நல்லுபதேசத்தைக் கேட்க பலரும் காத்திருக்கிறார்கள், ஆனால் நிர்வாகக் காரணங்களுக்காக மஹான்களைச் சுற்றி நிருத்தப்பட்டுள்ள ஒரு சிலர், ஏதோ காரணங்களைக் கூறி இவர்களை ஸுலபமாக நெருங்கி விட முடியாமல் தடுக்கிறார்கள் என்கிறார்கள் பலர், பணம், பதவி, ஸுகம் ஆகியவற்றுக்குக் கட்டுப்படாத மடாதிபதிகள் பீடாதிபதிகள் ஆசார்யர்கள் குருமார்கள் பாகவதர்கள் ஆகியோர் கூட தன்னைச்சுற்றி இருக்கும் ஒரு சிலரின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நடக்கிறார்களோ எனத்தோன்றுகிறது, கலியுகத்தின் பாதிப்பு ஸத்ஸங்கத்திலும் ஏற்பட்டுள்ளதோ எனத்தோன்றுகிறது,

ரோஜாமலரைச் சுற்றிலும் முட்கள் இருப்பதைப்போல் ஸாதுக்களைச்சுற்றிலும் ராக த்வேஷ முள்ளவர்கள் இருக்கிறார்கள் ,வைகுண்டத்தில் பகவானைக் காணச் சென்ற ஸனகாதி முனிவர்கள் கூட காவலாளிகளால் (ஜய விஜயர்களால்) தடுக்கப்பட்டார்கள் என்கிறது ஸ்ரீ பாகவதம், ஆனால் தன்னைச் சுற்றிலும் இப்படி ஒரு சூழ்நிலை இருப்பதை , தன்னை ஸுலபமாக மக்கள் நெருங்க முடியாமல் இருக்கும் சூழ்நிலையை இவர்கள் அறிந்து கொண்டுள்ளார்களா? என்பதே ஸந்தேஹம்தான்,.

ஆகவே ஸாதுக்கள், மஹான்கள், பாகவதர்கள், பீடாதிபதிகள், ஆசார்ய புருஷர்கள், ஆகியோர், தன்னை கட்டுப்படுத்தும் ஸமூகத்திலிருந்து வெளிவந்து, எப்போதும் யாராலும் சிரமமின்றி அனுகக்கூடியவர்களாகவும், தான் எங்கு செல்லலாம், எங்கு செல்லக்கூடாது, யாருடன் பேசலாமா? யாருடன் பேசக்கூடாது என்பதை ஸ்வயமாக சிந்தித்து முடிவெடுப்பவர்களாகவும் இருக்கவேண்டும். இதற்கு பகவான் அனுக்ரஹிக்கட்டும்.

மழை பெய்விக்க பல வழிகள் இருக்கின்றன

இவ்வுலகில் ஜீவராசிகளையும், அவர்கள் உயிர் வாழத் தேவையானவற்றையும் ஸ்ருஷ்டி செய்த பகவான், மேலும் ஸ்ருஷ்டி செய்யும் சக்தியை புத்தியை மனிதனுக்கு வழங்கினார், ஆனால் யேஷாமன்னம் வாதோ வர்ஷ மிஷவ: என்பதாக உணவு காற்று மழை ஆகிய மூன்றை ஸ்ருஷ்டிக்கும் கட்டுப்படுத்தும் சக்தியை மட்டும் மனிதனுக்குத் தராமல் தன்னிடமே வைத்துக் கொண்டார்,

ஆகவேதான் மனிதன் எவ்வளவோ முயற்சித்தும் உணவு காற்று மழை ஆகியவற்றை உத்பத்தி செய்ய கட்டுப்படுத்த முடியவில்லை, இதற்கு தெய்வ அருளுடன் கூடிய மனித முயற்சி தேவை, மனித முயற்சி மட்டும் வெற்றியைத் தராது.

தமிழகத்தில் தற்சமயம் மழை பெய்ய வேண்டிய காலம், ஆனால் இதுவரை மழை முழுமையாகப் பெய்யவில்லை, விவஸாயத்துக்கு ஆதாரமான மேட்டூர் டாமிலும் ஜலமில்லை, காவேரீ போன்ற நதிகள் வறண்டு கிடக்கின்றன, விவஸாயிகள், வாயில்லா ஜீவன்கள், செடி கொடிகள் ஆகிய அனைவரும் மழையை எதிர்பார்த்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் மட்டுமல்ல, பாரதம் முழுவதுமே மழைக்குறைவு என்கிறார்கள் விக்ஞானிகள், இதற்குக் காரணம் எதுவாக இருந்தாலும் தற்சமயம், தேவையான மழையைப்பெற பகவானை ஆராதித்தல் என்பதே ஸரியான வழிமுறை,

அயோத்தியில் ஒரு ஸமயம் மழை பொய்த்த போது ருஷ்யச்ருங்கரை அயோத்திக்கு அழைத்து வந்து யாகங்களை நடத்தி மழையை பெய்வித்தார் தசரதர், என்னும் (ராமாயண) சரித்திரம் மழைக்குகட்டாயம் தெய்வ வழிபாடு தேவை என்பதை உணர்த்துகிறது.

மழை பெய்விக்க பல வழிகள் இருக்கின்றன, அக்னிஹோத்ரிகள் காரீரி இஷ்டி என்பதைச்செய்தால் மழை பெய்யும் என்கிறது ச்ரௌதம்,

வேதம் கற்றவர்கள் பர்ஜன்ய சாந்தி (வருண ஜபம்) செய்தால் மழை பெய்யும் என்கிறது ஸ்ம்ருதி,

மஹாபாரதத்தில் விராடபர்வா பாராயணம் செய்தால் மழைபெய்யும் என்கிறது புராணம்,

நீர் நொச்சி ஸமித்தால் கணபதி ஹோமம் செய்தால் மழை பெய்யும் என்கிறது தந்த்ர சாஸ்திரம்,

ஒரு ராகத்தைப் பாடினால் மழை பெய்யும் என்கிறது ஸங்கீத சாஸ்த்ரம்,

ஆலயங்களில் நந்திக்கு ஜலம் கட்டுதல் போன்றவற்றைத் தெரிவிக்கிறது ஆகம சாஸ்திரம்,

ஆழ்வார்களின் பாடல்களை பதிகங்களை பாடுவதால் மழைபெய்யும் என்கின்றன தமிழ் வேதங்கள்,

இவைகள் அனைத்துமே மழைபெய்யச்செய்யும் சக்திவாய்ந்தவை, அவரவரின் சக்திக்குத் தக்கவாறு மழைக்காக மேற்கூறியவற்றைச் செய்யலாம்,

இவை எதுவும் தெரியாதவர்கள், அவரவர் வீட்டிலோ ஆலயங்களிலோ இந்த வருஷம் உரிய காலத்தில் தேவையான அளவு மழை பெய்ய வேண்டும் என்று மனமுறுகி பகவானிடம் ப்ரார்த்தனை செய்யலாம். இதற்கு பகவான் அனுக்ரஹிக்கட்டும்

நிஸ்சயதார்த்தத்தை இரண்டு முறை நடத்தத்தேவையில்லை

நாற்பது ஸம்ஸ்காரங்களுக்குள் விவாஹம் (திருமணம்) என்பதும் ஒன்று, ஆண் பெண் இருவருக்கும் மன ஒற்றுமை ஏற்படுத்தி நல்ல ஸந்ததியை ஏற்படுத்துவதே திருமணத்தின் நோக்கமாகும்,

வாக்தா3னம் ச ப்ரதா3னம் ச வரணம் பாணிபீட3னம்

ததா2 ஸப்தபதீ3 சேதி விவாஹ: பஞ்சாங்க3 உச்யதே

என்பதாக 1)வாக்தானம்(நிஸ்சயதார்த்தம்), 2)கன்யா ப்ரதானம், 3) வர ப்ரேஷணம்4)பாணி கிரஹணம் 5) ஸப்தபதீ என்னும் முக்கியமான ஐந்து நிகழ்ச்சிகளைக் கொண்டது விவாஹம், தற்சமயம் நமது ஸமூஹத்தில் விவாஹம் இவ்விதம்தான் நடத்தப்படுகிறது என்றாலும், வாக்தானம் (நிஸ்சயதார்த்தம்) என்பது மட்டும் விவாஹத்துக்கு சில மாதங்களுக்கு (நாட்களுக்கு) முன்னால் ஒருமுறையும் விவாஹத்துக்கு முன்நாள்மாலை ஒருமுறையும் என ஒரே நிகழ்ச்சி இருமுறை நடத்தப்படுகிறது,

இவ்வாறு நிஸ்சயதார்த்தத்தை இரண்டு முறை நடத்தத்தேவையில்லை, சாஸ்திரங்களில் இதை இரண்டுமுறை நடத்துமாறு கூறவில்லை, விவாஹத்துக்கு முன் நாள் மாலை ஒருமுறை மட்டும் நடத்தினாலே போதும், இதனால் வீணான (மண்டபம்சாப்பாட்டு போக்குவரத்து ஏற்பாட்டு) சிலவுகளைத் தவிர்க்கலாம், சிக்கனமாகத் திருமணத்தை நடத்தவேண்டிய நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் திரவியத்தை வீண் சிலவு செய்யலாமா? ,யோசிக்க வேண்டும்,

மேலும் பல மாதங்களுக்கு முன்பு செய்யப்படும் நிஸ்சயதார்தத் துக்கும் விவாஹத்துக்கும் இடைபட்ட நாட்களில் பெண்ணின் பையனின் பெற்றோர் ச்ராத்தம் தர்ப்பணம் செய்தல், தீட்டுக் காத்தல், இறந்த வீட்டுக்குச் செல்லுதல், போன்றவற்றிலும், நிஸ்சயதார்த்தம் செய்யப்பட்டு நின்றுபோய் விட்ட விவாஹத்துக்கு பரிஹாரங்களைத் தீர்மானிப்பதிலும் பல சாஸ்திர ஸங்கடங்கள் ஏற்படுகின்றன,

ஸக்ருத் ஆஹ ததாமீதி பெரியோர்கள் வாக்கிலிருந்து ததாமி (தருகிறேன்) என்னும் சொல் ஒருமுறைதான் வரும் உடனே அது செயல்படுத்தப்படும் என்கிறது நீதி வாக்கியம்,

ஆகவே விவாஹ (திருமண) நிகழ்ச்சிகளில் நாமாக தற்காலத்தில் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் வேண்டாத பல நிகழ்ச்சிகளை, குறிப்பாக இருமுறை நிஸ்சயதார்த்தம் என்பதை தவிர்க்க முயற்சிக்கலாம், வீணான சிலவுகளைத்தவிர்த்துபெரியோர்களின் ஆசி பெற்று மந்திரங்களை சிரத்தையுடன் சொல்லி விவாஹம் ந்டைபெற ஸ்ரீ பகவான் அனுக்ரஹிக்கட்டும்.