Friday, April 9, 2010

நம்மை நாமே ஆத்ம பரிசீலனை செய்து கொண்டாலே ஓரளவு நாம் நமது தவறை திருத்திக்கொண்டு நல்வழியில் செல்லத்துவங்குவோம்

கால: க்ரீடதி கச்சத்யாயு: காலம் விளையாடுகிறது ஆயுள் சென்றுகொண்டே இருக்கிறது என்கிறார் ஷ்ரீ ஆதிசங்கரர் பஜகோவிந்த ஸ்தோத்ரத்தில், அது உண்மைதான், ஒவ்வொரு வருஷமும் பிறக்கும் போதும் ஒவ்வொருவரின் வயதும் கூடிக் கொண்டே இருக்கிறது, அதாவது மேலும் வாழ வேண்டிய நாட்களில் ஒருவருஷம் குறைந்துள்ளது என்பதும் நமக்கு உணர்த்தப்படுகிறது, ஆகவேதான் நமது சாஸ்திரங்களும் ஒவ்வொரு மனிதனும் காலை எழுந்தவுடன் இன்று நாம் என்னென்ன தர்மங்களை செய்ய வேண்டும்? என்று சிறிதுநேரம் யோசித்து தீர்மானித்துக்கொள்ள வேண்டும் என்றும், இரவு படுக்கும்போது இன்று நாம் எவ்வளவு தர்மம் செய்தோம்? எவ்வளவு அதர்மம் செய்தோம்? என்று நினைத்துப் பார்க்க வேண்டும் என்றும் கூறுகிறது.

மனிதனாகப் பிறந்ததின் பயனையும், நமது குறிக்கோளையும், அடைவதற்கான பயணத்தில் நாம் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறோம் என்பதை ஆராய வேண்டிய நாள்தான் புத்தாண்டு துவங்கும் நாள், சென்ற வருஷத்தில் நாம் செய்யவேண்டிய கடமைகளில் ஸரியாகச்செய்தவை எத்தனை? செய்யத் தவறியவை எத்தனை? மற்றவர் மத்தியில் நம்மைப்பற்றிய ய‹ஸ் (புகழ்) அதிகரித்ததா? அல்லது நமது புகழ் குறைந்ததா? அவ்வப்போது தலையெடுத்து நம்மை தவறான வழியில் செலுத்த முயற்சிக்கும் கோபம் அஹங்காரம் ஆத்திரம் பொறாமை போன்றவைகளை நாம் எவ்வளவு தூரம் கட்டுப்படுத்தியுள்ளோம்?

நமது வாழ்க்கை நம்மைச் சேர்ந்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உபகாரமாக பயனுள்ளதாக அமைந்துள்ளதா? மற்றவர்களுக்காக, குறிப்பாக உலகத்துக்காக நாம் செய்தது - செய்ய வேண்டியது என்ன?, நாம் பணம் புகழ் ஆகியவற்றை நேர்மையான வழியில்தான் ஸம்பாதிக்கிறோமா? மற்றவருக்குச்சேர வேண்டியவற்றை அபஹரிக்காமல் இருக்கிறோமா? நம்மை நம்பி வாழும் நமது குடும்பத்தினரை நாம் மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டுள்ளோமா?, நம்மை உருவாக்கி வளர்த்துவிட்ட நமது பெற்றோர்களுக்கும் குருவுக்கும் ஆற்ற வேண்டிய கடமைகளை ஸரியாகச்செய்தோமா? என்றெல்லாம் ஆலோசிக்க வேண்டிய நாள்தான் புத்தாண்டு பிறக்கும் நாள், இவ்வாறு நம்மை நாமே ஆத்ம பரிசீலனை செய்து கொண்டாலே ஓரளவு நாம் நமது தவறை திருத்திக்கொண்டு நல்வழியில் செல்லத்துவங்குவோம், இதற்கு ஷ்ரீபகவான் அனுக்ரஹிக்கட்டும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.